தண்டவாளத்தில் விரிசல்... சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு!

 

சென்னை நகரின் மிக முக்கிய போக்குவரத்து வழித்தடமான கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை இன்று காலை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக, இப்பகுதியில் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுத் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கல்வி மற்றும் தங்களது பணிகளுக்காக மின்சார ரயில்கள் மூலமாகவே சென்னை நகருக்குள் வந்து செல்கின்றனர்.

இன்று காலை அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அவசர நேரத்தில் இந்த ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எனப் பலரும் வழியெங்கும் கடும் அவதிக்குள்ளாகினர். ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் வழக்கத்தை விடவும் கட்டுக்கடங்காத அளவில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ரயில்கள் நீண்ட நேரமாக வராததால் மாற்று வழி தெரியாமல் தவித்த பயணிகள் பலர், உடனடியாக அருகில் உள்ள பேருந்து நிலையங்களை நோக்கிப் படையெடுத்தனர். இதன் காரணமாகச் சென்னை மாநகரப் பேருந்துகளிலும் வழக்கத்தை விடப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் விரிசல் மற்றும் சேதம் குறித்துத் தகவல் அறிந்தவுடன், தெற்கு ரயில்வேயின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தண்டவாளப் பகுதியைச் சரிசெய்து, ரயில் போக்குவரத்தை மீண்டும் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சில மணி நேரங்களில் இந்த வழித்தடத்தில் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.