திராவிடக் கோட்டையில் விரிசல்.. 4 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 15,000 பேர் தவெகவில் ஐக்கியம்!

 

அதிமுகவின் மிக முக்கியத் தூண்களாகவும், டெல்டா மற்றும் கொங்கு மண்டலங்களின் அசைக்க முடியாத சக்திகளாகவும் வலம் வந்த இரு முக்கிய 'விஜயபாஸ்கர்கள்' தங்களது பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

மாமல்லபுரத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் சொகுசு ரிசார்ட்டில் இன்று காலை முதல் இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தவெகவின் முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் இந்த மாபெரும் இணைப்பு விழா நடைபெற்றது:

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுக தலைமையின் தவறான தனிப்பட்ட முடிவுகளால் தான் விலகுவதாகக் காலை பேட்டியளித்திருந்த நிலையில், தற்பொழுது அதிகாரப்பூர்வமாகத் தவெகவில் இணைந்துள்ளார்.

கரூரின் முக்கியப் புள்ளியான முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கருடன் இணைந்து தவெகவில் தடம் பதித்துள்ளார். இவர்களுடன் சேர்த்து முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எஸ்.வளர்மதி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்களும், மாவட்டச் செயலாளர்களும் தங்களை ஆளுங்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

கடந்த சில நாட்களாக அரங்கேறி வந்த உள்கட்சிப் பூசல்களின் உச்சகட்டமாக, அதிமுகவின் அடிமட்ட உள்கட்டமைப்பே தற்பொழுது தவெகவை நோக்கி நகர்ந்துள்ளது. தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் இந்த மாற்றுக்கட்சியினர் வரவேற்பு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் திரண்டு வந்த சுமார் 15,000-க்கும் மேற்பட்ட அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த விழாவில் பங்கேற்றுத் தங்களை இணைத்துக் கொண்டனர்.

திமுக மற்றும் அதிமுக ஆகிய பாரம்பரியக் கட்சிகளின் தலைமைகளுக்கு எதிராகத் தவெக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் காரசாரமான கருத்துக்களை வெளியிட்டு வரும் வேளையில், இந்த இரு 'விஜயபாஸ்கர்களின்' தவெக நோக்கிய வரவு, தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவிற்குப் பலவீனத்தையும், ஆளுங்கட்சியான தவெகவிற்குப் புதிய உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.