கிரிக்கெட் விளையாட்டால் விபரீதம்...  சிறுவர்களை ஜன்னலில் கட்டி வைத்துச் செருப்பால் தாக்கிய 3 பேர் !

 

கர்நாடக மாநிலத்தின் பாகல்கோட்டை மாவட்டம் கெரூரா காவல் எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமப்புறப் பகுதியில், நேற்று மாலை பள்ளி மைதானத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் இணைந்து ஆர்வமுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவன் அடித்த பந்தானது, எதிர்பாராத விதமாக அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ரேணுகா என்ற பெண்ணின் மீது தவறுதலாக விழுந்துள்ளது. இதனால் பயங்கர ஆத்திரமடைந்த அந்தப் பெண், இதுகுறித்து உடனடியாகத் தனது உறவினர்களான பசவராஜ் மற்றும் அபி ஆகிய இருவரிடமும் தெரிவித்துப் பள்ளி மைதானத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

மைதானத்திற்கு வந்த அவர்கள் இருவரும் பந்தை அடித்த 14 வயது சிறுவன் மற்றும் அங்கே விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு சிறுவன் என மொத்தம் இருவரைப் பிடித்துப் பள்ளியின் ஜன்னல் அருகே நிறுத்தி, அவர்களின் கைகளைக் கயிற்றால் கொடூரமாகக் கட்டியுள்ளனர். பின்னர் பச்சிளம் சிறுவர்கள் என்றும் பாராமல் ரேணுகா, பசவராஜ் மற்றும் அபி ஆகிய 3 பேரும் சேர்ந்து தங்களது கைகளில் இருந்த செருப்பால் அந்த இரு சிறுவர்களையும் சரமாரியாகத் தாக்கி வன்கொடுமை செய்துள்ளனர். சிறுவர்கள் வலியால் கதறி அழுதபோதும் எவ்வித இரக்கமுமின்றி கைகளாலும், செருப்புகளாலும்   மீண்டும் தாக்கிய கொடூரம் அரங்கேறியுள்ளது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஏழை எளிய கிராம மக்கள் உடனடியாக அங்கு தலையிட்டு, பாதிக்கப்பட்ட சிறுவர்களைக் கயிற்றில் இருந்து மீட்டுப் பத்திரமாக அவர்களது இல்லங்களுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துச் சிறுவர்கள் தங்களது பெற்றோரிடம் கண்ணீருடன் விபரத்தைக் கூறவே, ஆத்திரமடைந்த பெற்றோர்கள் கெரூரா காவல் நிலையத்தில் தங்களது அவசரப் புகாரைத் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் போலிசார் 3 பேர் மீதும் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில்  தலைமறைவாக உள்ள ரேணுகா, பசவராஜ் மற்றும் அபி ஆகிய மூவரையும் போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.