உயிருக்குப் போராடும் கிரிக்கெட் வீரர்...  அரிய வகை நோயால் பாதிப்பு ... டெல்லி மருத்துவமனையில்   அனுமதி!

 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாப்பூர் ஜத்ரான், 'எச்.எல்.எச்'  எனப்படும் மிகவும் அரிய மற்றும் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டைச் சீர்குலையச் செய்யும் இந்த நோய், தற்போது அவருக்கு முற்றிய நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தனது வேகப்பந்து வீச்சால் பலமுறை ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றிகளைப் பெற்றுத் தந்த இந்த 38 வயது நட்சத்திர வீரர், இப்போது வாழ்வா சாவா என்ற போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மருத்துவ சிகிச்சைக்காக டெல்லி வந்த ஷாப்பூர், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து, தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். இந்த நோயின் தீவிரம் காரணமாக அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்குத் தீவிரமான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வரும் ஜூலை மாதத்தில் அவர் தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாட இருந்த நிலையில், இந்தச் செய்தி அவரது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான வீரராகக் கருதப்படும் ஷாப்பூர் ஜத்ரான், 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் முதல் வெற்றியை உறுதி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் விரைவில் குணமடைய வேண்டி சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அவரது சிகிச்சைக்கான உதவிகளைச் செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.