பட்டப்பகலில் ஆசிரியையிடம் தாலிச் சங்கிலி பறிப்பு - சென்னையில் அதிகரிக்கும் குற்றங்கள்!

 

சென்னை வண்டலூர் அருகே மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை முடித்துவிட்டுத் திரும்பிய அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரைக் கீழே தள்ளி, அவர் அணிந்திருந்த தங்கத் தாலிச் சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த செல்வி (49), ஊனமாஞ்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை முடித்துவிட்டு, வண்டலூர் மேம்பாலப் படிக்கட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், திடீரென ஆசிரியையைக் கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் இருந்த 7 சவரன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினான்.

ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டுப் அப்பகுதியிலிருந்த இளைஞர்கள் கொள்ளையனைப் பிடிக்க முயன்ற போதிலும், அவன் ரயில்வே தண்டவாளம் வழியாகத் தப்பிச் சென்றான்.

இச்சம்பவத்தில் தாலிப் டாலர் பகுதி (சுமார் 2 சவரன்) கீழே விழுந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்டது. மீதமுள்ள 5 சவரன் சங்கிலியுடன் தப்பிய நபரைப் பிடிக்க ஒட்டேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.