"பிஏக்களால் நெருக்கடி...” - புதிய அமைச்சர்களைச் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுப்பதாகப் புகார்!

 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாகத் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டு, தவெக தரப்பில் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனைத் தவிர மற்ற 25 பேரும் முற்றிலும் புதிய முகங்களாக அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில், புதிய அமைச்சர்களின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் நிழல் நிர்வாகம் ஒன்று அமைச்சரவைக்குள் நடப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த 25 அமைச்சர்களுக்கும், தவெக அமைச்சரவையில் உள்ள ஒரு 'முக்கிய அமைச்சர்' தனக்கு மிகவும் வேண்டப்பட்ட நெருக்கமான நபர்களைத் தனிச் செயலாளர்களாகவும்   உதவியாளர்களாகவும் பணியமர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த உதவியாளர்கள் புதிய அமைச்சர்களுக்குத் தொடர்ந்து நிர்வாக ரீதியாகப் பெரும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அமைச்சர்கள் எந்தவொரு கோப்பில் கையெழுத்திட்டாலும், அந்தத் தகவல் உடனுக்குடன் அந்த முக்கிய அமைச்சருக்கு ரகசியமாக அனுப்பப்படுகிறது. இதன் காரணமாகத் தங்களது துறையின் ரகசியங்களைக் கூடப் பாதுகாக்க முடியாமல் புதிய அமைச்சர்கள் வேதனையடைந்துள்ளனர்.

துறை ரீதியான கோப்புகளில் தங்களுக்குச் சாதகமாகச் சில முடிவுகளை எடுக்கக் கோரி, முதலமைச்சர் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தியே அந்த முக்கிய அமைச்சர் பிஏக்கள் மூலமாகப் புதிய அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது. முதலமைச்சருக்கு எந்தவிதத் தகவலும் தெரியாமலேயே, அவரது பெயரைப் பின்னணியில் வைத்துப் புதிய அமைச்சர்களைத் தொடர்ந்து அச்சுறுத்தியும், அவர்களைத் தங்களது கைப்பாவைகளாக மாற்றும் முயற்சியிலும் அந்த முக்கிய அமைச்சர் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திறமையை நிரூபிக்க முடியாமல் அமைச்சர்கள் தவிப்புஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு தனிப்பட்ட திறமை இருக்கும் சூழலில், தங்களைச் சுதந்திரமாகச் செயல்பட விட்டால் மட்டுமே மக்கள் பணிகளைச் செம்மையாகச் செய்ய முடியும் எனப் புதிய அமைச்சர்கள் குமுறுகின்றனர்.

தற்போதைய நிழல் கட்டுப்பாடுகளால் தங்களால் முழுத் திறமையுடன் பணியாற்ற முடியவில்லை என்றும், இந்த விவகாரம் குறித்து விரைவில் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் போவதாகவும் தவெக-வின் புதிய அமைச்சர்கள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே எழுந்துள்ள இந்த உள்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.