பகீர்... வீட்டு குளியலறைக்குள் புகுந்த 7 அடி நீள முதலை... பரபரப்பு வீடியோ!

 

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக ஆனந்த் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாகப் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது. வெள்ளநீருடன் சேர்ந்து பாம்புகள் மற்றும் விஷப் பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்து வந்தனர். இந்தச் சூழலில் தான் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட முதலை ஒன்று குடியிருப்பு வீட்டிற்குள் நுழைந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாபாய் சவுகான் என்பவரது வீட்டிற்குள் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட 7 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட முதலை ஒன்று புகுந்தது. நள்ளிரவில் வீட்டின் வெளியே நாய்கள் தொடர்ந்து குரைத்ததால் சந்தேகமடைந்த பாலாபாய் சவுகான் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் குளியலறைக்குள் 7 அடி நீள முதலை பதுங்கியிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இந்தச் சம்பவம் குறித்துக் குடும்பத்தினர் உடனடியாக வனத்துறைக்கும் மீட்புக் குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனப் பாதுகாவலர்கள் நிலேஷ் பர்வாட் மற்றும் மனீஷ் பிரஜாபதி தலைமையிலான மீட்புக் குழுவினர் உடனடியாகப் பணியைத் தொடங்கினர். தயா அறக்கட்டளையின் தலைவர் நிதேஷ் சவுகான் மற்றும் தொண்டூழியர் துஷார் ராணா ஆகியோரின் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி முதலையைப் பாதுகாப்பாக மீட்டனர். பிடிபட்ட முதலை பின்னர் அருகில் உள்ள குளத்தில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது. வீட்டின் குளியலறைக்குள் முதலை புகுந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.