விமான நிலையத்தில் பயணியின் சூட்கேசில் காய்ந்த முதலைத் தலை !
இத்தாலியின் துரின் (Turin) நகரில் அமைந்துள்ள காசெல்லே விமான நிலையத்தில், வெளிநாட்டுப் பயணியொருவரின் உடமைகளில் இருந்து ஆபத்தான முறையில் கடத்தி வரப்பட்ட காய்ந்த முதலைத் தலை சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மியாமி நகரத்தில் இருந்து இஸ்தான்புல் வழியாக இத்தாலியின் துரின் விமான நிலையத்திற்கு வந்தடைந்த பயணி ஒருவரின் உடமைகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவரது சூட்கேசில் பாதுகாக்கப்பட்ட மற்றும் அழிந்துவரும் அபாயத்தில் உள்ள வகையைச் சேர்ந்த காய்ந்த முதலைத் தலை ஒன்று பழுப்பு நிற காகிதத்தால் மறைத்து வைக்கப்பட்டு கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சர்வதேச அளவில் அழிந்துவரும் விலங்குகளைப் பாதுகாக்கும் வாஷிங்டன் ஒப்பந்தத்தின்படி (Washington Convention) முதலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உரிய சான்றிதழ்கள் அல்லது அனுமதியின்றி இது போன்ற தடை செய்யப்பட்ட வனவிலங்குப் பொருட்களை இறக்குமதி செய்வது சட்டவிரோதமாகும்.இதன் அடிப்படையில் அந்தப் பயணி மீது கடத்தல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குக் பலத்த அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.