"கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும்” - ட்ரம்ப்
ஈரான் மீதான ராணுவத் தாக்குதல் திட்டத்தை அரபு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் உடனடியாக ஏற்காவிட்டால் மீண்டும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான விமானத் தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஆனால், சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அரபு நாடுகளின் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளின்படி, இந்தத் தாக்குதல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் ஒரு சுமுகமான உடன்பாட்டை எட்ட ஈரான் அரசு தீவிரமாக விரும்புவதாகவும், பேச்சுவார்த்தைக்குச் சற்று அவகாசம் தேவை என்றும் அரபு நாடுகள் உறுதியளித்துள்ளன. இதன் காரணமாகவே இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத் தாக்குதல் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் ஈரானுக்கான காலக்கெடு மிகக் குறைவாகவே உள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நிபந்தனைகளை உள்ளடக்கிய அமைதி ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க மறுத்து, இழுபறி நீடித்தால் அடுத்த சில தினங்களிலேயே தாக்குதல் தொடங்கப்படும்.
"அவர்கள் ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், மீண்டும் குண்டுமழை பொழியும். இந்த முறை தாக்குதலின் வீரியமும் தீவிரமும் இதற்கு முன் இல்லாத அளவுக்கு மிகக் கொடூரமாக இருக்கும்" என்று டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். அமெரிக்கப் படைகள் எந்த நேரத்திலும் தாக்குதலைத் தொடங்கத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானுடனான இந்த மோதல் போக்கு காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது உலக நாடுகளின் பணவீக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது.
இது குறித்துப் பேசிய டிரம்ப், "மேற்கு ஆசியப் பகுதியிலும், உலக அளவிலும் ஏராளமான எண்ணெய் இருப்பு (Oil Reserves) தேக்கமடைந்துள்ளது. ஈரானுடனான இந்தப் போர்ச் சூழல் மிக விரைவில் ஒரு முடிவுக்கு வரவுள்ளது. போர் நிறுத்தப்பட்டு, ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முழுமையாகத் திறக்கப்பட்டவுடன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகக் கடுமையாக, யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியாக வீழ்ச்சியடையும்" என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்பின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.