“கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்குச் சரியும்” - ட்ரம்ப் தகவல்!

 

ஈரான் மீதான போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை மூடல் போன்ற காரணங்களால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில், ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாகச் சரியும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகின் மிக முக்கியமான கடல் எல்லையான ஹார்முஸ் நீரிணை, ஈரான் மீதான அமெரிக்காவின் போர் தாக்குதல் காரணமாக கடந்த பிப்ரவரி முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதனைத் திறப்பது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

ஈரான் சரணடைந்தவுடன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும், அதன் பின்னர் கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்குச் சரியும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முந்தைய ஜோ பைடன் நிர்வாகத்தின் காலகட்டத்தை விடத் தற்போதைய தனது நிர்வாகத்தின் கீழ் அனைத்துப் பொருட்களின் விலைகளும், எரிபொருள் செலவுகளும் குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறுமை குறைந்துள்ளதுடன், மிகச் சிறந்த வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளதாகவும், தனிநபர் வருமானம் உயர்ந்து மக்கள் அதிக பணம் சம்பாதித்து வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.