கொடூரம்... தாய் எடுத்த விபரீத முடிவு... இரவு முழுவதும் அழுதபடியே தாயின் காலடியில் மயங்கி கிடந்த குழந்தை!

 

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அடோனியில், குடும்பப் பிரச்சனை காரணமாகக் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இரவு முழுவதும் தாயின் உடலைப் பார்த்துக் கதறி அழுத 3 வயதுக் குழந்தை மயங்கி விழுந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அடோனி பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி. இவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு ஸ்ரீயன் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்குப் பிறகு கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பச் சண்டைகள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகக் கடந்த ஒரு வருடமாக சுவாதி தனது கணவரைப் பிரிந்து, குழந்தையுடன் அடோனியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், சுவாதியின் தாய் நேற்று மாலை உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். வீட்டில் 3 வயதுக் குழந்தையுடன் தனியாக இருந்த சுவாதி, மன உளைச்சல் காரணமாகப் படுக்கையறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தாய் தூக்கில் தொங்குவதைக் கண்ட 3 வயதுச் சிறுவன் ஸ்ரீயன், என்ன நடக்கிறது என்று புரியாமல் தாயின் கால்களைப் பிடித்துக் கொண்டு இரவு முழுவதும் கதறி அழுதுள்ளான். தொடர்ந்து அழுதபடியே இருந்த அந்தப் பிஞ்சுக் குழந்தை, சோர்வடைந்து சுவாதி தற்கொலைக்குப் பயன்படுத்திய நாற்காலியிலேயே மயங்கிச் சரிந்து விழுந்துள்ளது.

இந்நிலையில் காலை நீண்ட நேரமாகியும் சுவாதியின் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சுவாதி சடலமாகத் தொங்கிக்கொண்டிருப்பதையும், அருகிலிருந்த நாற்காலியில் குழந்தை ஸ்ரீயன் அசைவற்றுக் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். முதலில் குழந்தையும் உயிரிழந்து விட்டதாக போலீசார் எண்ணினர். ஆனால், குழந்தையைத் தூக்கித் தட்டி எழுப்பியபோது சிறுவன் கதறி அழுததைக் கண்டு நிம்மதியடைந்த போலீசார், உடனடியாகக் குழந்தைக்கு முதலுதவி அளித்து மீட்டனர்.

தனிமையையும் மன அழுத்தத்தையும் தாங்க முடியாமல் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகச் சுவாதியின் தாய் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்துச் சுவாதியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை இழந்து தவிக்கும் 3 வயதுக் குழந்தையின் நிலை அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும் கண்ணீரையும் வரவழைத்துள்ளது.

மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், அதிலிருந்து விடுபடத் தமிழக அரசின் 104 அல்லது சினேகா  தற்கொலைத் தடுப்பு உதவி மையத்தின் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.