கொடுமை... பைக் விபத்தைப் பார்க்க கூடிய மக்கள் மீது லாரி மோதியதில் 7 பேர் பலி! 

 

ஜார்கண்ட் மாநிலத்தில் ஸ்கூட்டி ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், விபத்தைப் பார்க்கச் சாலை ஓரத்தில் கூடியிருந்த மக்கள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதிய கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள கர்ரா காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று வழக்கமான போக்குவரத்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்தச் சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டி ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்து குறித்து அறிந்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் வழிப்போக்கர்களும் என்ன நடந்தது என்பதைப் பார்ப்பதற்காகச் சாலை ஓரத்தில் திரண்டு கூடியுள்ளனர்.

அப்போது, அதே சாலையில் கட்டுப்பாட்டை இழந்து மிக அதிவேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாகச் சாலையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது பயங்கரமாக மோதியது. லாரி மோதிய வேகத்தில் அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 பேர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கர்ரா பகுதி காவல்துறையினர், உயிரிழந்த 7 பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய லாரி ஓட்டுநரைப் பிடிப்பதற்காக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தைப் பார்க்க வந்த பொதுமக்கள் மீது லாரி மோதி 7 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.