கொடுமை... நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணை, அடர்ந்த காட்டில் வீசிச் சென்ற குடும்பத்தினர்!
தெலங்கானா மாநிலத்தில் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணை, இனி மேல் பராமரிக்க முடியாது எனக் கூறி அவரது குடும்பத்தினரே அடர்ந்த காட்டில் கைவிட்டுச் சென்ற மனிதநேயமற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மஞ்சீரியல் மாவட்டம் இந்தாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா (35). கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கரீம்நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் இவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், லலிதாவுக்கு நோய் குணமடையாததால் இவரை மேலும் பராமரிக்க முடியாது எனக் கருதிய குடும்பத்தினர், வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மருத்துவமனையிலிருந்து காரில் அழைத்து வந்துள்ளனர். ஆனால், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், காட்டாரம்-மேடாரம் சாலையோரம் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று அப்படியே கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து லலிதாவை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், இந்த கொடூரச் செயலைச் செய்த குடும்பத்தினர் மீது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.