வரதட்சணை தராததால் கொடூரம்... மருமகள், பேத்தியைக் கொன்ற மாமியார் குடும்பம்!
ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில் வரதட்சணையாகப் ஆடம்பர எஸ்யூவி (Scorpio) கார் வாங்கித் தராததால், 25 வயதுப் பெண்ணையும் அவரது ஒன்றரை வயதுக் குழந்தையையும் மாமியார் வீட்டார் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வால் ராஜ்புரா கிராமத்தைச் சேர்ந்த சோஹில் என்பவருக்கும் சகுஃப்தா (25) என்பவருக்கும் கடந்த 2023-இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு சகுஃப்தாவின் மாமியார் வீட்டார் தொடர்ந்து ஸ்கார்பியோ கார் கேட்டு வரதட்சணைக் கொடுமை செய்து வந்தனர்.
கார் வாங்கித் தராததால் சோஹிலுக்கு மறுமணம் செய்து வைக்கப்போவதாக மாமியார் மிரட்டியுள்ளார். ஆகஸ்ட் 15 அன்று சகுஃப்தாவைப் பெற்றோர் வீட்டில் கொண்டு போய் விட்ட நிலையில், பஞ்சாயத்து கூட்டப்பட்டு ஏசி மற்றும் ரூ.50,000 பணம் வாங்கித் தருவதாக முடிவாகி, சகுஃப்தாவின் தந்தை யகீன் அதை வாங்கிக் கொடுத்து மகளைத் திரும்ப அனுப்பி வைத்துள்ளார்.
மாமியார் வீட்டிற்குச் சென்ற அடுத்த நாளே சகுஃப்தா பெற்றோருக்குத் தொடர்புகொண்டு, கணவரும் மாமியார் வீட்டாரும் தன்னை மீண்டும் அடிப்பதாகவும், குழந்தையைக் கொன்றுவிடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சகுஃப்தாவும் அவரது ஒன்றரை வயதுப் பெண் குழந்தையும் உயிரிழந்துவிட்டதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
சகுஃப்தாவின் கழுத்தில் நெரித்ததற்கான காயங்கள் இருந்ததை உடற்கூறாய்வு மற்றும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். தந்தை யகீன் அளித்த புகாரின் அடிப்படையில், கணவன் சோஹில், மாமியார் அஃப்சானா மற்றும் கிராமத் தலைவர் சாஹிப் உட்பட 11 பேர் மீது கொலை மற்றும் வரதட்சணைக் கொலை சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.