பவானியில் கொடூரம்.. பிறந்த சில மணி நேரத்திலேயே பேரக் குழந்தையைக் கொன்ற பாட்டி... சொன்ன பகீர் வாக்குமூலம்!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிறந்த சில மணி நேரத்திலேயே பெண் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்ற பாட்டியைப் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பவானி பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவது முறையும் பெண் குழந்தை பிறந்ததால், குடும்பக் கஷ்டத்தைக் காரணம் காட்டி, குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே அதன் பாட்டியான தங்கமணி (47) அக்குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சந்தேகமடைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், குழந்தை இயல்பாக உயிரிழக்கவில்லை என்பதும், கழுத்து நெரிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டது என்பதும் உறுதியானது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினரிடம் பாட்டி தங்கமணி குற்றத்தை ஒப்புக்கொண்டு அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். அதைத் தொடர்ந்து அவரை வழக்குப் பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.