undefined

 மைதான கழிவறையில் கொடூரம்..  17 வயது வீராங்கனையை கர்ப்பமாக்கிய பயிற்சியாளர்!

 
அரியானா மாநிலத்தில் விளையாட்டுத் துறையில் பெண் வீராங்கனைகளுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வரும் நிலையில், ரேவாரி மாவட்டத்தில் ஹாக்கி பயிற்சியாளர் ஒருவர் தனது மாணவியையே சீரழித்த சம்பவம் ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் தலைகுனிய வைத்துள்ளது.

அரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், கடந்த 3 ஆண்டுகளாக உள்ளூர் மைதானம் ஒன்றில் ஹாக்கி பயிற்சி பெற்று வந்தார். அவருக்குப் பயிற்சி அளித்து வந்த பயிற்சியாளர், அந்தச் சிறுமியின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மைதானத்தில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் பயிற்சியாளர், மைதானத்தில் உள்ள கழிவறையிலேயே சிறுமியை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் விளைவுகள் மோசமாக இருக்கும் என மிரட்டியும் வந்துள்ளார்.

பயிற்சியாளரின் இந்த கொடூரச் செயலால் அந்தச் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். கடந்த 5-ம் தேதி அந்தச் சிறுமிக்கு எதிர்பாராத விதமாகக் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் ரத்தப்போக்கு மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதுதான் அந்தச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை அவரது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. பயிற்சியாளரே தந்தையைப் போல இருந்து வழிகாட்ட வேண்டிய இடத்தில், வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாணவியின் வாழ்க்கையைச் சீரழித்தது உறவினர்களைக் கொதிப்படையச் செய்தது.

உடல்நிலை தேறிய நிலையில், கடந்த 9-ம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த உண்மைகளை போலீசாரிடம் புகாராக அளித்தார். அதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், தலைமறைவாக இருந்த காமவெறி பிடித்த அந்தப் பயிற்சியாளரை நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ (POCSO) சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பயிற்சியாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? மற்றும் வேறு மாணவிகளையும் அவர் இதுபோல மிரட்டியுள்ளாரா? என்பதை விசாரிக்கக் கோரினர். இதையேற்று, அவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அரியானாவில் சமீபத்தில் தான் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளர் மீது பாலியல் புகார் எழுந்தது. அந்தச் சுவடு மறைவதற்குள், ஒரு ஹாக்கி வீராங்கனைக்கு நேர்ந்துள்ள இந்த அவலம், பெண் விளையாட்டு வீராங்கனைகளின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.