ஓசூர் அருகே கொடூரம்.. நடத்தையில் சந்தேகம்.. தூங்கிக் கொண்டிருந்த மனைவியை வெட்டிக் கொன்றுவிட்டு சரண்டைந்த கணவன்!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, நள்ளிரவில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது கொடுவாளால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்த கூலித் தொழிலாளியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓசூர் அருகே உள்ள அக்கொண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமார் (32). இவரது மனைவி ருக்குமணி (28). ருக்குமணி அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால், அவரது நடத்தையில் சந்தேகமடைந்த குமார் தொடர்ந்து அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவில் மனைவி ருக்குமணி ஆழமான தூக்கத்தில் இருந்தபோது, ஆத்திரமடைந்த குமார் வீட்டிலிருந்த கொடுவாளை எடுத்து அவரது தலையில் கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் ருக்குமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியைக் கொலை செய்த பின்னர், குமார் நேரடியாகக் கெலமங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்று அதிகாரிகளிடம் சரணடைந்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கெலமங்கலம் காவல்துறையினர், ருக்குமணியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூங்கிக் கொண்டிருந்த மனைவியைக் கணவரே கொடுவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.