நாகப்பட்டினம் - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து செ.11 வரை ரத்து!

 

நாகப்பட்டினம் மற்றும் இலங்கை காங்கேசன்துறை இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் கப்பல் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் காரணமாகத் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் - இலங்கை இடையேயான இந்தக் கப்பல் சேவை கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போதிலும், ஆரம்பத்தில் போதிய வரவேற்பின்றி நிறுத்தப்பட்டது. பின்னர், 'சிவகங்கை' என்ற பெயரில் சுபம் என்ற தனியார் கப்பல் நிறுவனம் மூலமாக 2024-ஆம் ஆண்டு மீண்டும் சேவை தொடங்கப்பட்டது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்பட்ட இச்சேவைக்குப் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இதற்கிடையே, மோசமான வானிலை காரணமாக ஒரு நாள் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

பொதுவிடுமுறை நாளுக்குப் பிறகு இன்று கப்பல் சேவை மீண்டும் தொடங்கும் எனப் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில், சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு வருகை தந்த வணிக கடல்சார் துறை அதிகாரிகள், இலங்கைக்கு இயக்கப்படும் கப்பலின் பாதுகாப்பு அம்சங்கள், ஆய்வுச் சான்றிதழ்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது கப்பலில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, அந்தக் குறைபாடுகளை முழுமையாகச் சரிசெய்யும் வரை கப்பல் சேவையை ரத்து செய்யுமாறு சென்னை வணிக கடல்சார் துறை தரப்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

கடல்சார் துறை அதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ந்து, தற்போது கப்பலில் தீவிரச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான திட்டமிடப்பட்ட அனைத்துப் பயணங்களும் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன், 11-ஆம் தேதிக்குப் பிறகு பயணிகள் சேவை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீரமைப்புப் பணிகளின் நிலை மற்றும் கப்பல் இயக்கம் குறித்த கூடுதல் விபரங்கள் அன்று வெளியிடப்படும் எனக் கப்பல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.