மே 10ம் தேதி சிஎஸ்கே - லக்னோ மோதல்... இன்று முதல் ஆன்லைன் டிக்கெட் விற்பனை!

 

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 53-வது லீக் போட்டி வரும் மே 10-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (மே 6) காலை முதல் ஆன்லைனில் தொடங்குகிறது. ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த இந்த டிக்கெட் விற்பனை அறிவிப்பால் கிரிக்கெட் ஆர்வலர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த முறை டிக்கெட்டுகளை ஜோமாட்டோ டிஸ்ட்ரிக்ட் ஆப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ இணையதளம் வழியாக மட்டுமே வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் உள்ள இருக்கை வசதிகள் மற்றும் கேலரிகளின் தரத்தைப் பொறுத்து டிக்கெட் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. குறைந்தபட்ச டிக்கெட் விலை 1700 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. அதிகபட்சமாக விஐபி பாக்ஸ் மற்றும் சொகுசு இருக்கைகளுக்கு 12000 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் போலி டிக்கெட்டுகளை வாங்கி ஏமாற வேண்டாம் என்றும், அதிகாரபூர்வ இணையதளங்கள் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான ஆட்டத்தைக் காண ரசிகர்கள் இப்போதே ஆன்லைனில் குவியத் தொடங்கிவிட்டதால், டிக்கெட்டுகள் சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.