சென்னை அணி படுதோல்வி... ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறிய சிஎஸ்கே...  ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி! 

 

நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று மே 21 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான 66-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது. ஆரம்பம் முதலே சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த குஜராத் அணி வீரர்கள், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 229 ரன்கள் என்ற இமாலய இலக்கைக் குவித்து அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிரடி பேட்டிங்கைத் தொடங்கியது. ஆனால் குஜராத் அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், சென்னை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளித்தனர். இதனால் நிலை குலைந்து போன சென்னை அணி, இறுதியில் 13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெறும் 140 ரன்களுக்குப் பரிதாபமாக ஆல்-அவுட் ஆனது.

இந்த மோசமான தோல்வியின் மூலம், நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாகத் தொடரை விட்டு வெளியேறியுள்ளது. இந்தத் திடீர் தோல்வி மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான சென்னை ரசிகர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள சி.எஸ்.கே ஆதரவாளர்களுக்கும் பேரதிர்ச்சியையும் மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.