பறவைக் காய்ச்சல் பாதித்த பகுதியில் இருந்து சென்னைக்கு 8,000 கோழிகள்... அதிகாரிகள் அதிரடி விசாரணை!
கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து சென்னைக்குக் கோழிகள் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் நொச்சிக்காடு பகுதியில் இருந்து போபாலுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று சுமார் 25,000 கோழிகள் அழிக்கப்பட்டன. மேலும் சுற்றியுள்ள பண்ணைகளில் கோழிகள் விற்பனை செய்யக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் இருந்து இன்று காலை லாரிகளில் கோழிகள் ஏற்றிச் செல்லப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அனுப்பப்பட்ட 5 லாரிகளில் 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன; மீதமுள்ள 2 லாரிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையில், கடந்த 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் இதே பண்ணையிலிருந்து சுமார் 8,000 கோழிகள் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இந்தக் கோழிகள் சென்னையில் விற்பனை செய்யப்பட்டுவிட்டனவா அல்லது வேறு எங்கு வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்துக் கால்நடைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.