கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை! மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை”

 

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (40). சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வந்த இவர், நதியா (38) என்பவரை கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இதற்கிடையே நதியா, கீழ்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராசு (52) என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், பின்னர் அது காதல் உறவாக மாறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கணவர் சென்னையில் வேலை செய்து வந்ததை பயன்படுத்திக்கொண்டு கோவிந்தராசு, நதியாவை அவ்வப்போது சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த ஜெகதீசன், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்து இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி ஏற்பட்ட தகராறின்போது ஜெகதீசன் கொலை செய்யப்பட்டார். மண்வெட்டியால் தாக்கி அவரை கொலை செய்ததாக நதியா மற்றும் கோவிந்தராசு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கு கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகளின் விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகள் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி, நதியா மற்றும் கோவிந்தராசு ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சரஸ்வதி உத்தரவிட்டார். மேலும் இருவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.2021-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த வழக்கு கடலூர் மாவட்டத்தில் கவனம் பெற்றுள்ளது.