கொலை வழக்கில் தப்பிய ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் இன்ஸ்பெக்டர்!
கடலூர் மாவட்டத்தில் ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தப்பியோடிய மற்றொரு ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிருத்விராஜ் (26). ரவுடியான இவர், தனது நண்பர்களான அருளரசு மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் ஆகியோருடன் நேற்று இரவு மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரும் பீர் பாட்டிலை உடைத்து பிருத்விராஜின் கழுத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து தப்பியோடிய இருவரையும் போலீசார் தேடினர். அன்பரசன் பிடிபட்ட நிலையில், அருளரசு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.
அவரைத் துரத்திச் சென்றபோது, அருளரசு காவல் உதவி ஆய்வாளர் முகிலரசுவைக் கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காவல் ஆய்வாளர் இளவரசி தற்காப்புக்காகத் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார். இதில் அருளரசின் வலது காலில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த அருளரசும், தாக்குதலில் காயமடைந்த உதவி ஆய்வாளர் முகிலரசுவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.