விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட கடலூர் தவெக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்!
விவசாயிகளிடம் வண்டல் மண் எடுப்பதற்காக ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்ட புகாரின் அடிப்படையில், கடலூர் தெற்கு மாவட்டத் தமிழக வெற்றிக் கழகத்தின் இணைச் செயலாளர் புலவேந்திரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் முயன்றுள்ளனர். அப்போது அங்கு வந்த தவெக கடலூர் தெற்கு மாவட்ட இணைச் செயலாளரான புலவேந்திரன், ஏரியிலிருந்து மண் எடுப்பதற்கு விவசாயிகளிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பணம் தராவிட்டால் மண் எடுக்க விடமாட்டேன் என அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
விவசாயிகளிடம் தவெக நிர்வாகி லஞ்சம் கேட்டு மிரட்டிய இந்த விவகாரம் கட்சியின் மாவட்ட தலைமைக்குக் கொண்டு செல்லப்பட்டது. கட்சியின் கொள்கைகளுக்கும், ஒழுங்கு நடவடிக்கை விதிகளுக்கும் முரணாகச் செயல்பட்டது முதற்கட்ட விசாரணையில் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, தவெக கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சீனுவாசன், லஞ்சப் புகாரில் சிக்கிய புலவேந்திரன் மீது உடனடி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, புலவேந்திரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் அவர் வகித்து வந்த மாவட்ட இணைச் செயலாளர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
கட்சியில் தவறு செய்யும் நிர்வாகிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தவெக தலைமை சமரசமின்றி உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்த அதிரடி நீக்கம் உணர்த்துவதாகக் கடலூர் மாவட்ட தவெக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.