ஒரே நேரத்தில் 1.5 லட்சம் சரவெடிகளை வெடித்து கிராம மக்கள் சாதனை - கடலூரில் நெகிழ்ச்சி!

 

கடலூர் அருகே கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரே நேரத்தில் 1.5 லட்சம் சரவெடிகளை வெடித்துத் தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடிய சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அடுத்த கோதண்டராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த பஜனை மடத் தெருவில் வசிக்கும் 15 குடும்பத்தினர், ஆண்டுதோறும் தீபாவளித் திருநாளை வித்தியாசமான முறையில் ஒன்றுபட்டுத் திருவிழா போலக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாண்டுத் தீபாவளியை முன்னிட்டு, அந்த 15 குடும்பத்தினரும் தலா 10,000 வாலா கொண்ட சரவெடிகளை வாங்கி வந்துள்ளனர். பின்னர் அந்த 1.5 லட்சம் பட்டாசுகளையும் ஒன்றோடொன்று இணைத்து, ஒரே பெரிய சரவெடிச் சங்கிலியாக மாற்றினர்.

தெருவின் நடுவே நீண்ட வரிசையில் கட்டப்பட்ட அந்த பிரம்மாண்ட சரவெடிக்கு ஒரே நேரத்தில் தீ வைக்கப்பட்டது. தொடர்ச்சியாக 6 நிமிடங்கள் 30 வினாடிகள் இடைவிடாமல் சரவெடிகள் வெடித்துச் சிதறியதால், அந்தப் பகுதியே புகையினாலும் பட்டாசு சத்தத்தினாலும் அதிரும்படி அமைந்தது.

கோதண்டராமபுரம் கிராம மக்கள் அனைவரும் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், கடந்த 13 ஆண்டுகளாகத் தொடர்ந்து இதேபோன்று ஒன்றிணைந்து பட்டாசுகளை வாங்கிப் பிரம்மாண்டமாகத் தீபாவளியைக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.