கியூட் தேர்வு எழுதப்போறீங்களா? இதோ என்.டி.ஏ. வெளியிட்டுள்ள அதிரடி கட்டுப்பாடுகள்!
இந்தியாவில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை (யு.ஜி.) மற்றும் முதுகலை (பி.ஜி.) படிப்புகளில் சேருவதற்கான ‘கியூட்’ (CUET) பொது நுழைவுத்தேர்வு, வரும் 11-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.), மாணவர்கள் தேர்வு மையங்களில் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான வழிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. கணினி வழியில் நடைபெறும் இந்தத் தேர்வில் எவ்வித முறைகேடுகளும் நடக்கக் கூடாது என்பதில் அதிகாரிகள் மிகத் தீவிரமாக உள்ளனர்.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய ஆடைக்கட்டுப்பாடுகள் குறித்துப் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதன்படி, மாணவர்கள் மெல்லிய மற்றும் லேசான நிறத்திலான உடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்றும், பெரிய பட்டன்கள் மற்றும் உலோக அலங்காரங்கள் கொண்ட உடைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலணிகளைப் பொறுத்தவரை, சாதாரண செருப்புகள் அல்லது குறைவான உயரம் கொண்ட ‘ஹீல்ஸ்’ காலணிகளை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையத்திற்கு வரும்போது ஹால் டிக்கெட் (அட்மிட் கார்டு) மற்றும் ஒரு ஒரிஜினல் அடையாள அட்டையைத் தவறாமல் எடுத்து வர வேண்டும். செல்போன், ஸ்மார்ட் வாட்ச் போன்ற மின்னணு சாதனங்கள் மற்றும் நகைகள் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் குடிக்க விரும்புவோர் வெளிப்படையான (டிரான்ஸ்பரன்ட்) வாட்டர் பாட்டில்களை மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே மையத்திற்குச் சென்று சோதனைகளை முடித்துக் கொள்வது நல்லது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.