சட்டமன்றத்தில் பரபரப்பு... சி.வி. சண்முகம் தவிர 232 எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு!
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், தற்காலிகப் பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் இன்று (மே 11) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி உறுப்பினராக முதலில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற உறுப்பினர்களும் வரிசையாக அவைக்கு வந்து எம்.எல்.ஏ-க்களாகத் தங்களது உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
பதவியேற்பு நிகழ்வின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான கீர்த்தனா உள்ளிட்ட ஒருசில உறுப்பினர்கள் தங்களது வெற்றிச் சான்றிதழை எடுத்து வர மறந்ததால், அவர்களது பெயர் அழைக்கப்பட்ட போது உடனடியாகப் பதவியேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இருப்பினும், அடுத்த சில நிமிடங்களிலேயே அவர்கள் தங்களது சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, முறைப்படி சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இன்றைய கூட்டத்தின் இறுதியில், அதிமுக உறுப்பினர் சி.வி. சண்முகம் மட்டும் பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற 232 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியேற்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளனர். சி.வி. சண்முகத்தின் இந்தத் திடீர் புறக்கணிப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. இதனிடையே, அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்றதைத் தொடர்ந்து, சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை (மே 12) நடைபெற உள்ளது.