'நக்கீரன்' கோபால் மீது வழக்குப்பதிவு - சென்னை சைபர் க்ரைம் நடவடிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக யூடியூப் விவாத நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, 'நக்கீரன்' இதழின் ஆசிரியர் ஆர். கோபால் மீது சென்னை பெருநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
'எங்கள் தேசம்' என்ற யூடியூப் சேனலில் கரூர் கூட்ட நெரிசல் குறித்து நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற நக்கீரன் கோபால், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக நந்தகுமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், சென்னை பெருநகர சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் நக்கீரன் கோபால் மீது சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
நக்கீரன் கோபால் பேசிய விவாத நிகழ்ச்சியின் முழு வீடியோ பதிவையும் கைப்பற்றியுள்ள சைபர் கிரைம் புலனாய்வாளர்கள், அதன் உள்ளடக்கங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அந்த நிகழ்ச்சி தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரிக்கும் பணிகளிலும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட அதுகுறித்த தகவல்களைக் கண்காணிக்கும் பணிகளிலும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.