‘அர்னாப்’ புயல் அதிகாலை 4 மணிக்குள் ஆந்திராவில் கரையைக் கடக்கிறது - கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று, பலத்த மழை!

 

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘அர்னாப்’ அதி தீவிரப் புயல் எதிர்பார்த்ததை விட அதிவேகமாக நகர்ந்து வந்து, இன்று அக்டோபர் 28ம் தேதி புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள்ளாக ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினத்திற்கு இடையே, ஏனாம் பகுதிக்கு அருகில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் கண்காணிப்பின்படி, புயலின் வெளிப்புறச் சுழல் பட்டை ஏற்கனவே நிலப்பகுதிக்குள் நுழையத் தொடங்கியுள்ளது. கடந்த சில மணி நேரங்களில் இது மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வந்துள்ளது. கரையைக் கடக்கும் நிகழ்வின் போது, காற்றின் சராசரி வேகம் மணிக்கு 125 முதல் 135 கி.மீ. ஆக இருக்கும் என்றும், அது சமயங்களில் மணிக்கு 150 கி.மீ. வரை எகிறி வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

புயலின் தீவிரமான தாக்கம் மற்றும் மோசமான வானிலை காரணமாகக் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் இருந்து பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இண்டிகோ உள்ளிட்ட முன்னணி விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

இந்தப் புயல் காரணமாக ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் அதன் பக்கத்து மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறும், அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறும் பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.