நியூசிலாந்தைச் சிதைத்த ‘வையாணு’ புயல்; அவசர நிலை பிரகடனம்.. 5 பேர் பலி - 90 விமானங்கள் ரத்து!
இயற்கை எழில் கொஞ்சும் நியூசிலாந்து நாட்டைப் பயங்கரமான ‘வையாணு’ புயல் தாக்கியுள்ளது. வட தீவுப் பகுதியில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. வையாணு புயல் கரையை கடந்தபோது மணிக்கு 140 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது.
குறுகிய நேரத்தில் 10 செ.மீ அளவு பேய் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மவுராகி ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளம், வார்க்வோர்த் நகருக்குள் புகுந்து சாலைகளையும், வீடுகளையும் மூழ்கடித்தது. சுமார் 5,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. மின் கம்பங்கள் சரிந்தும், மரங்கள் வேரோடு சாய்ந்தும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
புயல் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை உயர்ந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புயல் மற்றும் மழையினால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாயமான 11 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வக்காட்டேன் பகுதியில் மட்டும் 270 வீடுகளைச் சேர்ந்த 2,500 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வாங்கரே, பே ஆப் பிளெண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் நிர்வாகம் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
மோசமான வானிலை காரணமாகப் போக்குவரத்துத் துறை ஸ்தம்பித்துள்ளது. பாதுகாப்பு கருதி ஏர் நியூசிலாந்து நிறுவனம் தனது 90 விமான சேவைகளை அதிரடியாக ரத்து செய்துள்ளது. வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாகப் பல முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் புயல் தெற்கு நோக்கி நகர்ந்து ஹாக்ஸ் பே வழியாகக் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.