வங்கக்கடலில் சூறாவளிக்காற்று... வானிலை மையம் எச்சரிக்கை!

 

தெற்கு குஜராத்தில் இருந்து மத்திய கேரளா வரை நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, வங்கக்கடல் பகுதிகளில் வரும் ஜூலை 10ஆம் தேதி முதல் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சராசரி கடல் மட்ட நிலவரத்தின் அடிப்படையில் இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் ஜூலை 10ஆம் தேதி அன்று அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடிய குறிப்பிட்ட இந்த தினத்தில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதே காற்றழுத்தத் தாழ்வுப் பாதையின் காரணமாகத் தமிழகத்தின் நிலப்பரப்பிலும் தட்பவெப்ப மாற்றங்கள் நிலவக்கூடும். குறிப்பாக, வரும் ஜூலை 10 அன்று தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.