சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கால்வாடா பகுதியைச் சேர்ந்த சந்திரகலா என்பவரது மகள் தனம்மா. இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதால், 16 வயது மகன் லட்சுமணன் மற்றும் 14 வயது மகள் பிரணதியுடன் தாய் சந்திரகலா வீட்டிலேயே வசித்து வந்தார். அண்மையில் தனம்மாவின் தந்தை சைதுவும் இறந்துவிட்ட நிலையில், கட்டிட தொழிலாளியான தனம்மா இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்காக புனே நகருக்குச் சென்றுள்ளார். இதனால் பிள்ளைகள் இருவரும் பாட்டி சந்திரகலாவின் பராமரிப்பில் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு சந்திரகலா தனது பேரன் லட்சுமணன் மற்றும் பேத்தி பிரணதியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் எதிர்பாராத விதமாக வீட்டின் மின் இணைப்பில் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. வீட்டின் உள்ளே தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ வீட்டின் சமையலறை வரை பரவியதால் அங்கிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
சிலிண்டர் வெடித்த வேகத்தில் சந்திரகலாவின் வீடும் ஒட்டுமொத்தமாக இடிந்து தரைமட்டமானது. இந்த கோர விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி தூங்கிக் கொண்டிருந்த பாட்டி சந்திரகலா, பேரன் லட்சுமணன், பேத்தி பிரணதி ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு சடலங்களை மீட்டனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.