இனி ஒரே ஒரு கனெக்ஷன் மட்டுமே... 2 சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்களே உஷார்... !
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயு விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், மானியங்கள் சரியான நபர்களைச் சென்றடைவதை உறுதி செய்யவும் புதிய விதிகளைக் கடுமையாக அமல்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஒரே முகவரியில் அல்லது ஒரே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு மற்றும் குழாய் வழி எரிவாயு இணைப்பு ஆகிய இரண்டையும் வைத்திருப்பது சட்டவிரோதமாகக் கருதப்படும்.
உங்கள் பகுதியில் குழாய் வழி எரிவாயு வசதி இருந்தும், கூடுதலாக சிலிண்டர் வைத்திருந்தால் அதனை உடனடியாகச் சரணடைய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எரிவாயு இணைப்பு துண்டிக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்களை ஜூன் 30, 2026-க்குள் முழுமையாக முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சிலிண்டர் விநியோக முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர மே 1 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இனி சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ரகசிய குறியீட்டை (OTP) விநியோகஸ்தரிடம் சொன்னால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும். அதேபோல், அடுத்தடுத்த சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியும் மாற்றப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறையும் மட்டுமே சிலிண்டர் பதிவு செய்ய முடியும். இதுவரை இ-கேஒய்சி (e-KYC) முடிக்காத வாடிக்கையாளர்கள் தங்களது விநியோகஸ்தர் மூலமாகவோ அல்லது மொபைல் செயலி மூலமாகவோ பயோமெட்ரிக் அங்கீகாரம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உஜ்வாலா திட்டப் பயனாளிகள் ஆண்டுக்கு ஒருமுறை இந்த சரிபார்ப்பைச் செய்ய வேண்டும்.