சிலிண்டர் கட்டுப்பாடுகள் நீக்கினாலும் விலை குறையல... வணிகர்கள் கவலை!
சர்வதேச சந்தையில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, சமையல் எரிவாயு விநியோகத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் நீடித்து வந்தன. மத்திய அரசால் வணிக சிலிண்டர்கள் மீதான முந்தைய கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் காரணமாக உணவகங்களில் இனி அனைத்து வகையான உணவுப் பண்டங்களையும் தடையின்றித் தயாரித்து வழங்க முடியும் என்றாலும், அதன் சந்தை விலை குறைக்கப்படாதது வணிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
போருக்கு முன்னதாக 2,000 ரூபாய்க்குக் குறைவாக இருந்த 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலையானது, 3,327 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இமாலய விலை உயர்வு மற்றும் தொழிலாளர் சம்பளம் உள்ளிட்ட இதர கூடுதல் செலவினங்களை ஈடுகட்டுவதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவுப் பண்டங்களின் விலையானது ஏற்கனவே 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு நீங்கித் தாராளமாகக் கிடைத்தாலும் கூட, கொள்முதல் விலை குறையாததால் வணிகர்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.
இது குறித்துத் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பு விடுத்துள்ள முக்கிய அறிக்கையில், சிலிண்டர் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது மகிழ்ச்சி அளித்தாலும் அதன் விலை தற்போதும் குறையவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இட்லி, தோசை, மதிய உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைத் தற்போதைக்குக் குறைக்க வாய்ப்பில்லை என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக நிலவிய தட்டுப்பாட்டால் தனியார் சிலிண்டர்களுக்கு மாறிய வாடிக்கையாளர்களை மீண்டும் ஈர்ப்பது விநியோகஸ்தர்களுக்குப் புதிய சவாலாக மாறியுள்ளதாக ஊடகங்களில் முக்கியச் செய்தியாகப் பகிரப்பட்டு வருகிறது.