எரிவாயு சிலிண்டர் வெடித்து பெரும் விபத்து...  10 பேர் படுகாயம்!

 

தஞ்சாவூர் மாவட்டம் உஞ்சியவிடுதி கிராமத்தில் உள்ள குடியிருப்பு வீடு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் தீப்பற்றி எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் வீட்டிலிருந்தவர்கள் உடனடியாகத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியதுடன் தீ மேலும் வேகமாகப் பரவியது.

இந்த விபத்தில் வீட்டில் இருந்தவர்கள் மற்றும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள் உட்பட மொத்தம் 10 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காகக் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்தின் காரணமாக வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 10 பேர் காயம் அடைந்த சம்பவம்   கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.