நக்கீரன் இதழின் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கைது - பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்!

 

நக்கீரன் புலனாய்வு இதழின் மூத்த செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், பெண் யூடியூபர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்புகார் மற்றும் கைது நடவடிக்கை குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

'சவுக்கு மீடியா' யூடியூப் சேனல் தொகுப்பாளினி மாலதி அளித்த புகாரின்பேரில், கடந்த ஜனவரியில் 'கிங் 24 X 7' சேனலில் மாலதி குறித்து அவதூறாகவும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தவறான தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் BNS சட்டம், IT சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தாமோதரன் பிரகாஷ் (58) கைது செய்யப்பட்டுள்ளார்.

8 மாதங்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட புகாரில், எந்தவித முன் விசாரணையும் நடத்தாமல் நேரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம், இது அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. மேலும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.