பர்த் டே பார்ட்டியில் உற்சாகமாக நடனமாடியவர் பலி; 97வது பிறந்தநாளில் சோகம்!
அமெரிக்காவில் 97 வயதான முதியவர் ஒருவர் தனது பிறந்தநாள் விழாவில் அண்டை வீட்டாருடன் இணைந்து உற்சாகமாக நடனமாடிய அடுத்த சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த விடோ என்ற 97 வயது முதியவர், தனது பிறந்தநாளை உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் இணைந்து மிகவும் விமரிசையாகக் கொண்டாடியுள்ளார். 97 வயதிலும் மிகுந்த சுறுசுறுப்புடன் காணப்பட்ட விடோ, விழாவுக்கு வந்திருந்த அண்டை வீட்டாருடன் இணைந்து உற்சாகமாகப் பேசிக் கொண்டாடியுள்ளார்.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உலகப் புகழ்பெற்ற 'ஸ்டேயிங் அலைவ்' என்ற பாடலுக்கு அவர் மிகவும் உற்சாகமாக நடனமாடி அனைவரையும் மகிழ்வித்துள்ளார்.
நடனமாடி முடித்த கையோடு, அங்கு திரண்டிருந்த அண்டை வீட்டார் அனைவரும் விடோவைச் சுற்றி நின்று அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை பாடி வாழ்த்தியுள்ளனர். அவர்கள் வாழ்த்துப் பாடி முடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே, விடோ எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மகிழ்ச்சியும் உற்சாகமுமாகத் தொடங்கிய பிறந்தநாள் விழா, அடுத்த சில நிமிடங்களிலேயே முதியவரின் திடீர் மரணத்தால் பெரும் சோகத்தில் முடிவடைந்தது அப்பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது.