ஆபத்து... தமிழகத்தை நோக்கி வரும் புதிய புயல்.. இன்று முதல் நவம்பர் 19 வரை கனமழைக்கு வாய்ப்பு!

 

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகவுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்பதால், தமிழகத்தில் இன்று முதல் வரும் 19-ஆம் தேதி வரை பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து பரவலாகப் பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நேற்று வரையிலான காலக்கட்டத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பாகப் பெய்ய வேண்டிய மழையின் அளவான 24.3 செ.மீ-ஐ விட 4 சதவீதம் அதிகமாக, அதாவது 25.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக, இன்று ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

தற்போது நிலவும் மழைச் சூழலைத் தொடர்ந்து, வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை மறுதினம் (நவம்பர் 12) ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இது படிப்படியாக வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறி, வரும் 15-ஆம் தேதி வாக்கில் இலங்கையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிக்கு வந்து நிற்கும். பின்னர் மேலும் தீவிரமடைந்து தமிழகக் கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இந்த அமைப்பானது மேலும் வலுப்பெற்றுப் புயலாக மாற அதிக வாய்ப்புள்ளதாகவும், இது தமிழகத்தை நோக்கி மழையைச் சுமந்தபடி பயணித்து வருவதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 15 முதல் 19 வரை தீவிர மழை:
இந்த புதிய புயல் சின்னத்தின் காரணமாக, தமிழகத்தில் வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் மழைப் பொழிவு மீண்டும் தீவிரமடையும்.

நவம்பர் 15 முதல் 20-ஆம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக நல்ல மழை பதிவாகும். மேலும், இந்தப் புயல் கரையைக் கடக்கும் பட்சத்தில், வரும் நவம்பர் 19 அல்லது அதற்கு அடுத்த நாட்களில் தமிழகக் கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடலோர மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.