உயிருக்கு ஆபத்து... துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கோரி தவெக எம்.எல்.ஏ எஸ்பியிடம் மனு!

 

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, தனிப்பட்ட முறையில் துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்கக் கோரி மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் தவெக சட்டமன்ற உறுப்பினர் மனு அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினராக உள்ள விஜய், மதுரை மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேரில் சென்று இந்த பாதுகாப்பு கோரும் மனுவை வழங்கினார். தொகுதி மக்கள் பங்கேற்கும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும், குறைகேட்பு முகாம்களிலும் சிலர் வேண்டுமென்றே தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் முன்விரோதம் காரணமாகத் தனக்கு எதிராகச் சில நபர்கள் தொடர்ந்து சூழ்ச்சிகள் செய்து வருவதாகவும், இதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொகுதியில் தொடர்ந்து மக்கள் நலப் பணிகளையும் கட்சிப் பணிகளையும் தடையின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாக, தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.