"டார்லிங் முதலமைச்சர் விஜய்" - நேரில் சந்தித்து வாழ்த்து கூறியதோடு விஜய் பெயரிலேயே 3 பெண் குழந்தைகளுக்கு நடிகர் விஷால் செய்த மாஸ் காரியம்!
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை, நடிகர் விஷால் நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது வழக்கமான சம்பிரதாயங்களைத் தவிர்த்து, முதலமைச்சர் விஜய்யின் பெயரிலேயே 3 பெண் குழந்தைகளின் கல்விக்கு விஷால் நிதியுதவி அளித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அன்பிற்குரிய முதலமைச்சர் விஜய் அவர்களே, லயோலா கல்லூரிக் காலத்திலிருந்தே நான் உங்களை 'டார்லிங்' என்று தான் அழைத்து வருகிறேன்; அந்த அன்பு இன்றும் மாறவில்லை. வளர்ந்து வரும் நட்சத்திரமாக உங்களை எனக்குத் தெரிந்ததிலிருந்து, பல தடைகளையும் விமர்சனங்களையும் உங்கள் மௌனத்தாலும் வெற்றியாலும் கடந்து 'சூப்பர் ஸ்டார்' அந்தஸ்தை அடைந்து, பின்னர் தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சராக உயர்ந்த உங்களின் பயணத்தை நான் நேரில் கண்டிருக்கிறேன்."
Dearest darling CM Vijay @CMOTamilnadu
— Vishal (@VishalKOfficial) June 16, 2026
The word “darling “ hasn’t changed which I used to call u for the last so many years since i knew u from Loyola college. It all started wen I got to know you as a budding star and then seeing u rise up the ladder as the SUPERSTAR facing… pic.twitter.com/iTLAeCZ3cp
"இன்று உங்கள் பதவியும் பொறுப்பும் மாறியிருக்கலாம், ஆனால் நீங்கள் மாறவே இல்லை. உங்களைச் சந்தித்ததும், அதே பழைய அன்பையும் அரவணைப்பையும் உணர்ந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கலைஞர் ஐயா, ஜெயலலிதா அம்மா, ஸ்டாலின் அங்கிள் மற்றும் என் அன்பு நண்பர் உதயநிதி எனப் பலரையும் கண்ட எனக்கு, நம் மாநிலத்தின் முதலமைச்சரையும் அதே 'டார்லிங்' என்ற அன்பான சொல்லால் அழைத்தது நெகிழ்ச்சியாக இருந்தது. எனக்குள் இருக்கும் அந்த ரசிகனின் உணர்வு என்றும் மாறாது" என்று விஷால் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக முதலமைச்சர்களைச் சந்திக்கும் போது பூங்கொத்து அல்லது பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவிப்பதுதான் மரபு. ஆனால், இந்தச் சந்திப்பில் விஷால் ஒரு வித்தியாசமான நெறிமுறையைக் கையாண்டுள்ளார். பூங்கொத்து மற்றும் பொன்னாடைக்கான தொகையைக் கொண்டு, தமிழகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள, தகுதியுடைய 3 பெண் குழந்தைகளின் கல்விச் செலவை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்டுள்ளார். மிக முக்கியமாக, இந்த உதவிகளைத் தனது பெயரில் செய்யாமல் 'முதலமைச்சர் விஜய்' அவர்களின் பெயரிலேயே விஷால் செய்துள்ளார்.
இதனைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் விஜய்க்கு விஷால் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், "அந்தச் சிறுமிகள் உங்களை நினைத்து என்றும் பெருமை கொள்வார்கள். உங்கள் பதவிக் காலத்தில் நேர்மறையான மாற்றங்களும் வளர்ச்சியும் பெருகட்டும்; தமிழகம் சிறந்த நிலையை அடையட்டும்" என்றும் வாழ்த்தியுள்ளார்.