பகீர்...டேட்டிங் ஆப்பில் 40 லட்சம் இந்தியர்கள்.. திருமணம் மீறிய உறவுகளால் சீரழியும் கலாச்சாரம்.... அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை. !

 

இந்தியப் பண்பாடு, கலாச்சாரம் என்று மேடைக்கு மேடை முழங்கினாலும், நிஜத்தில் கதை வேறாக இருக்கிறது என்பதை ஒரு வெளிநாட்டுச் செயலி அம்பலப்படுத்தியுள்ளது. திருமணமானவர்கள் மட்டும் பயன்படுத்தும் ஒரு ரகசிய 'டேட்டிங்' செயலியில், தற்போது 40 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், பெங்களூரு போன்ற ஐடி நகரங்கள்தான் இந்த 'கள்ளக்காதல்' விளையாட்டில் முதலிடத்தில் உள்ளன என்பதுதான் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் செயலியில் ஆண்களின் எண்ணிக்கை 65 சதவீதமாக இருந்தாலும், பெண்களின் வருகைதான் கடந்த 2  ஆண்டுகளில் மலைக்க வைக்கும் வகையில் 148 சதவீதம் அதிகரித்துள்ளது. குடும்பம், குழந்தைகள் என்று பொறுப்பாக இருக்கும் பல இல்லத்தரசிகளும், அலுவலகம் செல்லும் பெண்களும் இந்தச் செயலியில் ரகசியமாகத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். வீட்டில் கிடைக்காத அன்பையோ அல்லது சாகசத்தையோ தேடி இவர்கள் தடம் மாறுவது, நமது பாரம்பரிய குடும்ப அமைப்பிற்கே விடுக்கப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது.

தனிமை மற்றும் துணையுடன் ஏற்படும் மனக்கசப்பு ஆகியவையே இத்தகைய ரகசிய உறவுகளுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி, இரண்டாம் கட்ட நகரங்களிலும் இந்த 'டிஜிட்டல்' கள்ளக்காதல் தீயாய் பரவி வருவதை புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. "திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது" என்கிற பழமொழி போய், இப்போது "திருமணம் என்பது செயலியில் சிதைக்கப்படுகிறது" என்ற நிலைக்கு வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.