நீட் வினாத்தாள் கசிவு, ரத்து, மறுதேர்வு பயம் - கோவையில் சிஐடியு நிர்வாகியின் மகள் தற்கொலை!

 

மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வில் நிலவி வரும் குளறுபடிகள், வினாத்தாள் கசிவுப் புகார்கள் மற்றும் தேர்வுகள் ரத்து போன்ற அடுத்தடுத்த அதிர்ச்சிகளால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, கோவையில் 19 வயது மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் செந்தில் பிரபுவின் மகள் அணு கீர்த்தனா (19) என்பவரே, நீட் மறுதேர்வு அச்சத்தால் இந்த விபரீத முடிவை நாடியுள்ளார்.

மாணவி அணு கீர்த்தனா ஏற்கனவே ஒருமுறை நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் அவருக்குப் பல் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்த போதிலும், எப்படியாவது எம்பிபிஎஸ் படித்து மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தோடு, நடப்பாண்டில் மீண்டும் நீட் தேர்வு எழுதி முடித்திருந்தார். ஆனால், நாடு முழுவதும் பெரும் புயலைக் கிளப்பிய நீட் வினாத்தாள் கசிவுப் புகாரால், அவர் எழுதிய தேர்வு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ஜூன் 21-ஆம் தேதி 'மறுதேர்வு' நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காகக் காத்திருந்த நிலையில், திடீரென மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்பு மாணவிக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மறுதேர்வுக்குக் குறைந்த நாட்களே இருந்ததால், அவரால் போதிய அளவில் தயாராக முடிய வில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் அணு கீர்த்தனா தனது சித்தப்பாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு உருக உருக்க ஒரு செய்தி அனுப்பியுள்ளார். அதில், "என்னால் எதிர்பார்த்த அளவிற்கு இந்த மறுதேர்வுக்குத் தயாராக முடியவில்லை. இதன் காரணமாக நான் கடந்த சில நாட்களாகத் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறேன்" என்று தனது மன வேதனையைக் கொட்டியுள்ளார்.

வாட்ஸ்அப் செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது சித்தப்பா, உடனடியாக வீட்டில் இருந்தவர்களுக்குத் தகவல் கொடுத்து விட்டு அணு கீர்த்தனாவின் அறைக்கு விரைந்துள்ளார். அதற்குள் மாணவி வீட்டில் விபரீத முடிவை எடுத்திருந்தார். உயிர்ப் போராட்ட நிலையில் இருந்த அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு, கோவை கணபதி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக அணு கீர்த்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மத்திய அரசின் தேர்வு முகமைகளின் குளறுபடிகளால், தங்களது பிள்ளைகளின் மருத்துவக் கனவு மட்டுமன்றி, அவர்களின் உயிரும் பறிபோய் வருவதாகப் பெற்றோர்கள் தரப்பில் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டப்படுகிறது.