தாவூத் இப்ராகிமின்  கூட்டாளி  இந்தியாவுக்கு நாடு கடத்தல்!  

 

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் மிக நெருங்கிய கூட்டாளியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனுமான முகமது சலீம் டோலா துருக்கியில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டான். இந்திய உளவுத்துறை மற்றும் சர்வதேச போலீசாரின் ரகசிய நடவடிக்கையால் பிடிபட்ட இவன், சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டான். இஸ்தான்புல் நகரில் பதுங்கியிருந்த இவனை சர்வதேச பிடிவாரண்ட் அடிப்படையில் மடக்கிப் பிடித்த பாதுகாப்பு படையினர், தற்போது அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை மற்றும் குஜராத் மாநிலங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் இவன் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தான். சுமார் 5000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சர்வதேச போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை வெளிநாடுகளில் அமர்ந்து கொண்டு இவன் இயக்கி வந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இவனது வருகை தாவூத் இப்ராகிமின் டி-கம்பெனி குழுமத்திற்கு விழுந்த மிகப்பெரிய அடியாகவும், இந்திய எல்லைக்குள் போதைப்பொருள் கடத்தலை முடக்க எடுக்கப்பட்ட முக்கிய முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்ற இந்த ஆப்பரேஷன் குளோபல் ஹன்ட் நடவடிக்கை மூலம், தலைமறைவு குற்றவாளிகளுக்கு இந்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இவனது மகன் மற்றும் சில கூட்டாளிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது முக்கிய புள்ளியே சிக்கியுள்ளான். டெல்லி விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட இவன், விரைவில் மும்பை போலீசாரின் காவலில் எடுத்து விசாரிக்கப்பட உள்ளான்.