undefined

நாளை மாலை வரை கெடு... திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா காங்கிரஸ்?!

 

கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில், இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாததால் தற்போது கூட்டணி முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர், கடந்த 2021-ல் ஒதுக்கப்பட்ட 25 இடங்களை விடக் கூடுதலாக, அதாவது குறைந்தது 35 முதல் 40 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

திமுக தரப்போ பழைய '25 + 1' (25 சட்டமன்றத் தொகுதிகள் + 1 மாநிலங்களவை சீட்) என்ற பார்முலாவைத் தாண்டி ஒரு தொகுதியைக் கூடக் கூடுதலாக வழங்கத் தயாராக இல்லை. மற்ற கூட்டணிக் கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டியிருப்பதால், காங்கிரஸின் கோரிக்கையை ஏற்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

திமுக தலைமை காங்கிரஸ் கட்சிக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது: நாளை மார்ச் 3ம் தேதி மாலைக்குள் காங்கிரஸ் தனது முடிவை அறிவிக்க வேண்டும். ஒருவேளை நாளைக்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால், காங்கிரஸைத் தவிர்த்துவிட்டு மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து அறிவிப்பை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு ஒருபுறம் இருக்க, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையையும் காங்கிரஸ் மறைமுகமாக முன்வைத்து வருவது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் உரிய அங்கீகாரம் கிடைக்காவிட்டால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. கிரிஷ் சோடங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "டிவிகே இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது, அவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது" என்று கூறியுள்ளது இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, இன்று திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய விசிக தலைவர் திருமாவளவன், "சிறிய கசப்புகள் இருந்தாலும் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலேயே நீடிக்கும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.