அமோனியா வாயு கசிவால் உயிரிழப்பு.. ஆளுநர் அர்லேகர் இரங்கல்!

 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நேர்ந்த கொடூர அம்மோனியா வாயு கசிவு விபத்து குறித்துத் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது ஆழ்ந்த இரங்கலையும் சோகத்தையும் பதிவு செய்துள்ளார்.

பெரியபாளையம் நச்சு வாயு கசிவு விபத்தில் சிக்கி இரு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் மற்றும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள துயரச் செய்தியைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது எக்ஸ் சமூக பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவள்ளூர் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆழாத் துயரமும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈடுசெய்ய முடியாத இந்த இமாலயத் துயர நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இந்த சோகத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடிய மன வலிமையையும், தைரியத்தையும் இறைவன் வழங்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். மேலும், நச்சு வாயுத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் மற்ற அனைத்துத் தொழிலாளர்களும் எவ்விதப் பாதிப்புமின்றி விரைவில் முழுமையாகக் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.