நேபாள் பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு; 6,000-க்கும் மேற்பட்டோர் காணவில்லை... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,450 ஆக அதிகரித்துள்ளதாகவும், காணாமல் போன 6,000-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் நேபாளக் காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் கடந்த மாதம் 26ஆம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவு காரணமாகப் போடோகோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தத் திடீர் பேரழிவால் வடக்கு மற்றும் மத்திய நேபாளத்தில் உள்ள கிராமங்களும் நகரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வெள்ளத்தில் வீடுகள், வாகனங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் பல நீர்மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு ஒரு மாதம் நெருங்கும் நிலையிலும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 1,450 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் சித்வான் மாவட்டத்தில் 367, ராசுவாவில் 236, கிழக்கு நவல்ப்ரசியில் 232, மேற்கு நவல்ப்ரசியில் 222, நுவாகோட்டில் 203, கோர்க்காவில் 79, தாதிங்கில் 72 மற்றும் தனஹுவில் 38 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், காத்மாண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 13,784 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளப் பெருக்குக்குப் பிறகு 6,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என நேபாளக் காவல்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஆறுகள், நீர்மின் திட்டப் பகுதிகள் மற்றும் இடிபாடுகள் நிறைந்த பகுதிகளில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த இயற்கைப் பேரிடரால் சீனப் பகுதியில் 43 பேர் உயிரிழந்திருப்பதுடன், 500-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.