பேருந்து கவிழ்ந்து கோர விபத்து: பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு; 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
லக்னோவில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பேருந்து பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து பீகார் மாநிலம் தர்பங்கா மற்றும் மோதிஹாரி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகத் தெரிகிறது.
லக்னோவின் கோசைகஞ்ச் (Gosainganj) பகுதியில் உள்ள டோல் பிளாசா அருகே வந்து கொண்டிருந்தபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரெனத் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு லக்னோவில் உள்ள டிராமா சென்டர் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓட்டுநர் தூங்கியதால் அல்லது அதிவேகமாகப் பேருந்தை இயக்கியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து ஓட்டுநரும் நடத்துநரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர், கிரேன் உதவியுடன் கவிழ்ந்த பேருந்தை அப்புறப்படுத்தினர். உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.