பயணிகள் படகில் திடீர் தீ விபத்து - பிலிப்பின்ஸில் பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு!

 

பிலிப்பின்ஸில் பயணிகள் படகில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதுடன், மாயமானவர்களைத் தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தலைநகர் மணிலாவிலிருந்து 132 பேருடன் தென்மேற்கு பலவான் மாகாணத்தில் உள்ள கொரான் நகரை நோக்கிச் சென்ற பயணிகள் படகு, கடந்த புதன்கிழமை இரவு இலக்கை அடைவதற்கு சுமார் 39 கி.மீ. தொலைவில் நடுக் கடலில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது.

இந்த கோர விபத்தில் இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக 43 பேர் மட்டுமே உயிர் தப்பிய நிலையில், விபத்தில் மாயமான மேலும் 13 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

விபத்துக்கான முழுமையான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், படகின் சரக்கு வைப்பறையில் ஏற்பட்ட வெடிவிபத்தே தீ பரவக் காரணமாக இருந்திருக்கலாம் என்று உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் காற்று பலமாக வீசியதுடன், மழையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் படகின் திறந்தவெளிப் பகுதிகளில் தார்ப்பாய்கள் கட்டப்பட்டிருந்த காரணத்தினால், தீ மளமளவென்று மற்ற பகுதிகளுக்கும் அதிவேகமாகப் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.