கடன் தொல்லை தாங்க முடியல... உருக்கமாக கடிதம் எழுதி மனைவி, மகள்களைக் கொன்று தொழிலதிபர் தற்கொலை!
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் அன்சூர் பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஹரிஷ் என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் பழைய வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு நிஷிதா என்ற மனைவியும், 13 மற்றும் 6 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். நன்றாகச் சென்று கொண்டிருந்த இவருடைய தொழிலில் திடீரெனப் பெரிய அளவில் சறுக்கலும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலில் ஏற்பட்ட கடன் நெருக்கடி காரணமாகக் குடும்பத்துடன் விபரீத முடிவு எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக உறவினர்களின் அழைப்புகளைச் செல்போனில் ஏற்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள் நேரில் சென்று வீட்டைப் பார்வையிட்டனர். அப்போது ஹரிஷ் தூக்கில் சடலமாகத் தொங்குவதையும், படுக்கையறையில் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் சடலமாகக் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிகள் இருவரின் வாய் மற்றும் மூக்கில் பிளாஸ்டிக் டேப் ஒட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கைப்பற்றப்பட்டனர். மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நஷம் கொடுத்துக் கொன்றுவிட்டுத் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.
சம்பவ இடத்தில் இருந்து ஹரிஷ் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தக் கடிதத்தில் தனது சொத்து விவரங்கள், கடன் நிலவரங்கள் மற்றும் நண்பர்களிடம் உள்ள சொத்துக்கள் குறித்து அவர் விரிவாக எழுதி வைத்துள்ளார். கடன் நெருக்கடி காரணமாகவே இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த இச்சம்பவம் மைசூர் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.