₹2,47,130 கோடி கடன்... தமிழக மின்சார வாரியத்தின் 'வெள்ளை அறிக்கை'யை வெளியிட்டார் அமைச்சர் நிர்மல்குமார்!

 

தமிழ்நாடு மின்சார வாரியத்தின்  நிதி நிலைமை, வரவு-செலவுகள் மற்றும் ஒட்டுமொத்த செலவினங்கள் குறித்த மிக முக்கியமான "வெள்ளை அறிக்கை"யை தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் இன்று வெளியிட்டுள்ளார். இந்த வெள்ளை அறிக்கையில் கடந்த 21 ஆண்டுகால மின்வாரியத்தின் நிதி மேலாண்மை குறித்த பல்வேறு அதிர வைக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளதால், தமிழக அரசியல் மற்றும் அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், மின்சார வாரியம் தற்பொழுது சந்தித்து வரும் கடுமையான நிதி நெருக்கடிகளைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்.

கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் நடப்பு 2026-ஆம் ஆண்டு வரையிலான 21 ஆண்டுகால மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த கணக்குகள், கடன்கள் மற்றும் செலவினங்கள் இந்த வெள்ளை அறிக்கையில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025-2026 நிதியாண்டில் மட்டும் மின்சார வாரியத்தின் செயல்பாடுகளுக்காக மற்றும் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.6,492 கோடி புதிய கடன் வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மின்சார வாரியம் மூழ்கியுள்ள சுமை குறித்த விவரத்தை அமைச்சர் வெளியிட்டார்.

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஒட்டுமொத்தமாக ரூ.2,47,130 கோடி கடன் இருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் கவலையுடன் தெரிவித்துள்ளார். மின்சார வாரியத்தின் உற்பத்திச் செலவு மற்றும் இதர செலவுகள் இவ்வளவு பெரிய அளவில் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது எப்படி என்பது குறித்து அரசுத் தரப்பில் ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டியது மிக அவசியமாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.